நடந்தால் பாதை வரும்
நினைத்தால் கவிதை வரும் ; நீண்டு நடந்தால் பாதை வரும் ;
முனைந்தால் முழுபலனும் முயற்சியின் முடிவில் வரும் .
தொடுத்தால் மாலை வரும்; விடுத்தால் மலர்க்குவியல் பெறும்.
எடுத்ததெக் காரியமும் படிப்படியாய்த் தான் படியும் .
மலைப்பாய்க் காண்கின்ற அம்மலைகூட மடுவாகும் :
நிலைக்கொண்ட மனதோடு நடந்திட வெற்றி நமதாகும் .
விளைக்கின்ற பயிர்களெல்லாம் விருந்திடவே உணவாகும் .
களைப்பின்றி உழைத்திடும் ஓர் உழர்வர்க்கே உயர்வாகும்
அமைப்பால் பலபேதங்கள் அளித்திட்டச் சமுதாயம் - சீர்
அமைப்பால் செப்பனிட ஓர் செயல்திறனும் உருவாகும் - நாம்
இணைந்தே இன்னல்களை எதிர்கொள்ளவே ஒன்றுபடாஅப்
பிணைப்பால் பின்னடையும் பிற்போக்குக் கொள்கையெல்லாம் !
இமயத்தில் கொடிநாட்ட ச் சமைத்திட்டான் பாதயைத்தான்
சமயத்தில் சிககலுற்றான் கண்டிலனோ பாதையவன் ?
சமயங்கள் யாவையுமே நெறிவழ்வின் பாதையென
சமயத்தில் மறந்திட்டே மோதிடவோ நின்றிட்டான் ! நடந்திலனே !
நிலவுக்குத் தாவிடவே நீலவானில் பறந்திட்டான் !
நிலவுலகில், ஆழ்கடலில் , எண்ணைக்கு அகழ்ந்திட்டான் !
தொலைத் தூரம் நோக்கிடவே தொலை நோக்கி அமைத்திட்டான் !
நிலைக்கின்ற உலகழிய அணு ஆற்றல் அறிந்திட்டான் !
வீழ்விற்கு நெறிகண்டான் வீண்மடிவே வீரமென்றான் !
வாழ்விற்கு நெறிகான ஓர் அன்புவழி மறந்திட்டான் !
விடிந்திடவே சமுதாயம் இருள்விடுத்தே விடியலைநோக்கி
நடந்திடவே பாதை வரும் , நடந்திடவோ மனமில்லையே !
வி. சி. மதனகோபால் - 20 -01 -96
( கவிதை இரவுக்காக )
நதிகள் நாட்டின் நரம்புகள்
பொங்குபனி தங்கிமயம்
தங்கமுடி யாகும் ;
கங்கைநதி அங்கிறங்கி
வங்கம்வரை பாயும் ;
சிங்கமென சிந்துநதி
சிந்துகவி பாடும் ;
இங்கிவையும் இன்னபிற
(மலை) அங்கமென வாகும் .
கார் முகிலைக் கார்குழலாய்க் கொண்டு உறவாடும் ;
ஓர் குடகில்
ஆர்ப்பரிக்கும் காவிரியும் பாடும் .
பார் முழுதும்
நீர்நதிகள் சேர்விரித்சதொடும் ;
ஏர்பிடிக்கும் உழவருக்கு
நாடி நரம்பாகும்.
பனியுறையும் கொடுமுடியே
மூளையென வாகில்
பனினதிகள்
பவனிவரும் நாடி நரம்பன்ரோ ?
முகிலுறையும் மலைமுகடே
மூளையென வாகில்
அகிலமுள்ள அதினதிகள்
நாட்டு நரம்பன்ரோ ?
நதிகளிடை அணைகளினால்
மின்பொருளும் பெருகும்
அதிலுமுறும் பினைகளினால்
வழக்குகளும் பெருகும்
நதிகலதை இணைப்பதினால்
பிணக்குகளும் தீரும்
கதியிதனை பெறுவதெனில்
பாரதமும் ஓங்கும் .
நனிசிறந்த நதிக்கரையே
நகரிகத் தொட்டில்
மனிதகுலம் மதித்துயர
மேன்மைபெற நாட்டில் !
மனத்துணர்வு நரம்புவழி
அங்கம்வரை செல்லும்
இனத்துணர்வு நதிகள்வழி
நாடு வரை செல்லும் !
வி.சி.மதனகோபால் - 24 - 2 -96
(கவிதை இரவுக்காக )
கடவுளுக்கு ஒரு கடிதம்
இன்பத்தை எங்கு தொலைத்தாய் இறைவா- அதை
துன்பக்கடல் மூழ்கி
முத்தெடுக்கவோ ?
பண்பதனை எங்கு ஒளித்தாய் இறைவா ! எம்
புண்பட்ட நெஞ்சதனில் புதைந்து தேடவோ ?
விரிகின்ற வெளிதனில் எங்கு ஒளித்தாய் இறைவா - உமைப்
புரிகின்ற பாடமதைத் தெரிகின்ற வகைசெயவாய் !
கண்வைத்தே ஒளியும் தந்தாய் இறைவா ! பின் ஆங்கோர்
பெண்வைத்தெம் பேதைமையைப் பறைசாற்றினையோ ?
காதலுக்குக் காரணம் கண்டாய் இறைவா ! பின் மனிதன்
சாதலுக்குக் காரணமென் ? செப்ப மறுத்தாய் !
மண்ணின்று விண்ணும் சென்றோம் ஏவுகணை கொண்டே
மண்ணதனில் வீணடித்தோம் நீ கொடுத்த வாழ்வுதனை !
வெஞ்சமரில் வஞ்சகத்தில் பஞ்சமகா பாதகத்தில்
நஞ்சதனை நெஞ்சதனில் விதைத்ததற்கு நீ பொறுப்போ ?
விண்வெளியில் விண்மீன்கள் வியப்பினிலாழ் எண்ணிக்கையில்
விடிந்தபின்னர் கங்குலவன் கூட்டிச்சென்ற தெங்கதனை ?
பகலவனின் பரிவேகம் கிளபபியதோர் துகளகளிலே
முகிலேனவே மூழ்கினவோ முக்கோடி உலகமெல்லாம் ?
மனதினிலே தேக்கிநின்ர மாமலைபோல் யோசனைகள்
தினந்தினமும் கேட்டிடுவேன் , திகட்டாமல் கேட்டிடுநீ !
களிப்பினிலும் அவன் நாட்டம் , சலிப்பினிலும் அவன் வாட்டம்
அளித்திடுவேன் எனதிந்த கடவுளுக்கு ஒரு கடிதம்
வி சி மதனகோபால் - ௧௬-௦௨-௯௬ 16-02-96
(கவிதை இரவுக்காக )
தேடித் தொலைதுவிட்டோம்
தேடித்தொலைத்துவிட்டோம்
தீந்தமிழ்ச் சுவையைத்தான்
பாடிக் கெடுத்துவிட்டோம் பண்புகெடும் பாடல்களால் .
கூடித்திளைக்குமொரு குவலயத்தின் மாட்சிமையை
சாடிக் கெடுத்துவிட்டோம் நெறிபிறழ்ந்த வெறித்தனத்தால் .
ஓடிக்களைத்து விட்டோம் ஒரு பகட்டு வாழ்வின் பின்னால்
மூடிக் கெடுத்துவிட்டோம் நல் உள்ளக் கிடக்கைதன்னை .
வாடிக்கிடக்கு மொரு வறியோரின் வாழ்வுயர
தேடிச்சளித்துவிட்டோம் தக்கதொரு திட்டம் தன்னை .
தேடித் தொலைத்துவிட்டோம் தாமீட்டும் பொருளெல்லாம்
ஓடிக் குழிபறிக்கும் ஒரு குதிரை வாலைநம்பி.
ஆடிக் குடித்துவிட்டு அரும்பணத்தை வீணடித்தோம்
தேடித் தொலைத்துவிட்டோம் தங்கநிகர் வாழ்வதனில் .
பாடித்திரியும் பறவைகள்போல் ஓடித்திரிந்த சுதந்திரத்தை
தேடித் தொலைத்தோம் மணவறையில் துணையொன்று வந்தபின்னே .
பச்சிளங்குழந்தையின் , நம் ,பால் மனதை, பகையறியா பாசமதை ,
நச்சினை விதைக்கும் சமூகத்தில் ஊன்றியபின் அதைத் தொலைத்தோம் !
பள்ளியில் பயின்ற துள்ளலையும் கல்வியில் பெற்ற ஆர்வத்தையும்
கள்ளியைப் போன்ற சமூகமதில் கால்வைத்ததும் தொலைத்துவிட்டோம் !
வாடிய மனத்தின் வாட்டத்தையும் நாடிய துன்பம் எதுவெனினும்
தேடியே தொலைப்போம் இங்கோர் கவிதை வடித்தே !
இலக்கணம் மீறிய கவிதைகளினால்
கிளர்ச்சியைத் தேடி யாப்பினைத் தொலைத்தோம் .
பகட்டு வாழ்வின் கருப்புப்போர்வையில் இருட்டைத்தேடி வெளிச்சதைத் தொலைத்த
விட்டில் பூச்சியின் antimatter நாமே !
ஒன்றைத்தேடி ஒன்றைத்தொலைப்பது இங்கு உலகியல் சட்டம்
வாழ்க்கை வணிகத்தில் என்றும் சந்திப்பது வெறும் பண்டமாற்று வட்டம்
வி.சி.மதனகோபால் - 17 -8 -96
(கவிதை இரவுக்காக)
பெண் குழந்தை
கண்ணிரண்டதனில் ஒன்றதன் உயர்வோ ?
பெண் குழந்தை எனில் பிரிதேன் தாழ்வு !
மன்னுயர் வதெல்லாம் பெண்ணுயர்வாலே !
என்றிதை யுணர்ந்தே ஏற்றிடு வோமே !
அறநெறி பாடிய
ஔவையும் பெண்ணே
புறநா நூற்றுத் தாய்ப் பெரும் பெண்ணே !
தேனில் குழைந்த திருப்பாவை தனையே
பேணிப் புனைந்த கோதையும் பெண்ணே !
விண்ணில் பறந்த வாலன் டினாவும்
மண்ணில் கோலோச்சிய ஓர் இந்திராவும்
எண்ணில் சிறந்த சகுந்தலைப் பெண்ணும்
பெண்ணினத் துயர்வை பறைசாற்றிலையோ !
வீரம் செறிந்த ஓர் ஜான்சி ராணி !
ஈரம் நிறைந்த ஓர் அன்னை தெரேசா !
பாட்டிலும் பெண்கள் , பல் ஏட்டிலும் பெண்கள்
எட்டுத்திக்கும் இசை கொட்டிட வாழ்வார் !
மன்பதை தழைக்கப் பெண்சிசு வேண்டும்
வென்றிடப் பாரில் சக்தியின் வடிவாய் !
பட்டொளி வீசிடும் பேரெழில் வடிவம்
பட்டாம் பூசசியாய்த் திரிந்திடல் வேண்டும் .!
வி.சி.மதனகோபால் 25-1-96
(கவிதை இரவுக்காக)
கணிப்பொறி
ஒரு கண்ணோட்டம்
கணிப்பொறி காட்டிடும் பாதையைக் காணீர்
பணித்தது ஊட்டிடும் பொலிவினைப் பாரீர் - சில
மணித்துளிகளில் அது மாய்த்திடும் வேலையை - நாம்
பணித்திடும்போது பேராற்றலோடு வியக்கவே !
மண்ணில் வாழும் மாந்தர்கள் தம்மை
விண்ணில் செலுத்தும் ஏவுகணைக்கும்
நுண்ணிய பாதையை நன்கமைத்திடவே
உண்ணியபடி யாங்கு உழைத்திடும் கணிப்பொறி !
கண்ணை மயக்கும் காரிகைக் கெல்லாம்
வண்ணத்துனிகளை வடிவமைத்திடவும்
எண்ணைக் கூட்டக் குறைக்கப் பெருக்க
முன்னணியானது முற்றிலும் கணிப்பொறி !
முப்பது லட்சம் மாணவர் முடிவையும்
முன்னச்சேற்றிய முத்திரைத் தாள்களில்
முத்தெனப் பதித்திடும் முன்னணிக் கணிப்பொறி !
முப்பது கோடி செய்திதாள்களும்
முறைப்படி பதிக்கவும் பகுக்கவும் வகுக்கவும்
முற்றிலும் முனைவது முன்னணிக் கணிப்பொறி !
இத்துணை ஆற்றலைப் பெற்றிட வேண்டின்
இதற்கொரு மென்பொருள் எழுதிடல் வேண்டும் .
அத்துணை ஆறும் செப்பிடல் வேண்டும் .
அமைப்பதோ சிரமம் ! அமைத்திடில் அற்புதமே !
மென்பொருள் இலக்கணம் இதுவெனக் காண்பீர்
மீச்சிறு உட்பொருள் தானேற்புண்டு
வழிமுறை எல்லாம் தானே வகுத்து
மிகப்பெரு வெளிப்பொருள் கடிதில் கொணர்ந்து
பிழை சிறிதளவும் தந்திடாவண்ணம்
விழைந்தவாறு விவரங்கள் அளிக்கும்
வித்தக ஆற்றல் கொண்டது என்பர் .
வி.சி.மதனகோபால்
25-11-95
( LIBM – Inaugural day)
முடிவில் ஒரு தொடக்கம்
முடிவில் ஒரு தொடக்கம், பின் முதலில் ஒரு சுணக்கம் !
விடிவில் ஒரு தொடக்கம் மறு இருளில் அது முடிக்கும் !
கடிதில் இருள் வடிக்கும் பின் விடிவில் அது முடிக்கும் !
படியில் வரும் இறக்கம் அப்பிடி தளரா தேறி முடிக்கும் !
நினைவில் வரும் வாட்டம் முடியாததைக் காட்டும் - பின்
முனைப்போடதில் மாய்ந்தால் அது பறந்தோடிடும் ஓட்டம் !
கனவில் வரும் ஏக்கம் வெறும் கனவல்லாது போக்கும்
நனவில் அதன் ஆக்கம்
நாம் நிறைவேறிடத் தீர்க்கும் !
வளியில் வரும் மாற்றம் விண்வெளியில் வரும் தோற்றம் !
எளிதில் உருமாற்றம் என
உருண்டோடிடும் தேற்றம் ! (Theorem )
விழுதில் அது துவங்கும் பின் விழுதாகவே முடியும் !
பழுதில் பாரதனில் இது எழுதாதொரு சட்டம் !
மதியில் வரும் கலைகள் படிபபடியாய்த் தினம் உருகும் !
விதியில் இது முடிவோ ! முடிவில் வெறும் இருளோ ?
கதியில்லை இதுவேன்றோ குமுறும் ? இல்லை வளரும் !
விதிவென்றிடும் பெருகும் ! இன்னும் தழைதொன்றியே வளரும்!
முடிவில் ஒரு தொடக்கம் ! இன்னும் முடியாது நம் உறக்கம் !
படிவொன்றினில் இறக்கம் அது ஏற்றத்தின் மறு துவக்கம் !
மடிவென்பது முடிவல்லவே பிறந்தால் மறுபடியும் ?
விடியல் வரும் நேரம் நம் பிடிகொன்டதும் அடையும் !
உலகெங்கணும் உயிர்கொண்டது ஒரு முடிவென்பதன் துவக்கம் !
பலகாலங்கள் காத்துநின்று பரிணாமத்தில் நம் இணக்கம் !
பலகாலங்கள் மறுபோயினபின் பாரினில் வெறும் சுணக்கம் !
சிலகாலத்தில் சீறிடவே
! மறு பரிணாமத் தொரு விளக்கம் !
வி.சி.மதனகோபால்
(14-2-2010)